Thursday, July 12, 2018

அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Related image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் வேளாண்மை (B.Sc.(Hons.) Agriculture), இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுகள் இணையதளம் மூலம் 26-4-2018 முதல் 25-6-2018 வரை மேற்கொள்ளப்பட்டன.

இளம் அறிவியல் வேளாண்மை படிப்புக்கு 8,244 விண்ணப்பங்களும், இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) படிப்புக்கு 2,202 விண்ணப்பங்களும், தோட்டக்கலை படிப்புக்கு 887 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் இளம் அறிவியல் வேளாண்மை பிரிவில் 194 விண்ணப்பங்களும், சுயநிதி பிரிவில் 29 விண்ணப்பங்களும், தோட்டக்கலை பிரிவில் 17 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த படிப்புகளுக்கான சமவாய்ப்பு (ரேன்டம்) எண் 4.7.2018 அன்று வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கூறிய 3 படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் வே.முருகேசன் வியாழக்கிழமை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாணவர்கள் பல்கலைக்கழக இணையதள முகவரி (wwwannamalaiuniversity.ac.in) மூலம் தங்களது தரவரிசையை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் மேல்நிலைப் படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடங்கள் தமிழக அரசின் விதிப்படி ஒதுக்கப்படும். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்து குறுந்தகவல் மூலமாக தெரிவிக்கப்படும். கலந்தாய்வு அட்டவணை, கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம். மாணவர்களுக்கு தனியாக கலந்தாய்வுக் கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றார் அவர்.

கூடுதல் விவரங்களுக்கு மேற்கூறிய பல்கலைக்கழக இணைய தள முகவரியையும், auadmission2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், உதவி மைய தொலைபேசி எண்ணிலும் (04144-238349) தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment