Thursday, June 21, 2018

எம்.பி.பி.எஸ்.: அகில இந்தியக் கலந்தாய்வு நிறைவு: இன்று முடிவு வெளியீடு

Image result for எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்

நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் கட்டக் கலந்தாய்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடைமுறைகள் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கின. 

ஜூன் 20, 21 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) வெளியிடப்பட உள்ளன. கலந்தாய்வு முடிவுகளை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்றவர்கள் ஜூன் 23-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதிக்குள் அந்தந்தக் கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்டக் கலந்தாய்வுக்கான பதிவு நடைமுறைகள் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கட்டணம் எவ்வளவு?

Image result for எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்

அரசு கல்லூரிகள்: 

தமிழகத்திலுள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறும் மாணவர்கள் கல்விக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.13,600-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

அதே போன்று சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இடங்களைப் பெறும் மாணவர்கள் கல்விக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.11,600-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும். சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணம் உள்பட மொத்தம் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கல்விக் கட்டணம் ரூ.5.54 லட்சம், சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.3.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்: 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.3.85 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதே போன்று தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.2.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நிர்வாக இடங்கள்: 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.12.50 லட்சம், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கு கல்விக் கட்டணம் ரூ.6 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு: ஜூலை 9-இல் கலந்தாய்வு

Related image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) வெளியிடப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாகவே கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. சிறப்பு ஒதுக்கீடுதாரர்களில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஒதுக்கீடுக்கு 459 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 275 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வந்தனர். அதில் 261 பேரின் சான்றிதழ்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதேபோல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் ஒதுக்கீடுக்கு 6 பேரும், மாற்றுத் திறனாளிகளில் 60 பேருக்கும், விளையாட்டு வீரர்களில் 320 பேரின் சான்றிதழ்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவில் 130 பேரும், வேளாண் வணிகப் பிரிவில் 120 பேரின் சான்றிதழ்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியலும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்கள், வேளாண் வணிகப் பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் ஜூலை 17ஆம் தேதியும், இதர சிறப்புப் பிரிவினருக்கு ஜூலை 7ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறுகிறது. சிறப்புப் பிரிவினர் மட்டும் கலந்தாய்வுக்கு நேரில் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"மயிலாடுதுறையில் ஜூன் 30 முதல் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு'

Related image

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஜூன் 30 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் ஏழை, எளிய மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என சிட்டி யூனியன் வங்கி துணைப் பொது மேலாளர் ஏ. ராமசாமி கூறினார்.

மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் ஆகியவை சார்பில் நகராட்சி நூலகம் - தன்னார்வ பயிலும் வட்ட வளாகத்தில் ஜூன் 30-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சியளிக்கவுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், சிட்டி யூனியன் துணைப் பொது மேலாளர் ஏ. ராமசாமி போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு மேலும் அவர் பேசியது :
நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பயின்ற மாணவர்கள் 12 பேர் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்றார்.

தன்னார்வ பயிலும் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ். சிவராமன் : மயிலாடுதுறை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 100 பேர் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். பயிற்சி வகுப்புகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். பயிற்சி வகுப்பு ஜூன் 30 தொடங்கி செப். 16 -ஆம் தேதியுடன் நிறைவு பெறும்

குரூப்-2 தேர்வு; இலவச பயிற்சி வகுப்பு

Image result for இலவச பயிற்சி வகுப்பு

திருப்பூர் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப்-2 தேர்வுக்கான, இலவச பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக, அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசுப்பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடக்கும், போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்பு, இன்று முதல் துவங்குகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் பயிற்சி முகாமில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கலாம்.பயிற்சியில் சேர, பாஸ்போர்ட் அளவு போட்டோ, வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

நாளை மதுரையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்


மதுரையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறைகள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெறுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் என்.மகாலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.

தனியார் துறைகள் பங்கேற்கும் இந்த வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை புதூர் பகுதியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடத்தப்படுகிறது.

இதில் தனியார் துறையைச் சேர்ந்த சில முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளன. ஆகவே முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்விச்சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் 22 ஆம் தேதி காலையில் புதூர் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.