Thursday, May 17, 2018

நாளை 108ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம்

Image result for 108ஆம்புலன்ஸ் சேவை

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் (19.05.2018 சனிக்கிழமை) நடைபெற உள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் இம்முகாம் நடைபெறும்.

மருத்துவ உதவியாளர்: 

பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிஎம்எல்டி அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பு படித்த, 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இரு பாலரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்தப் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு ஆகியவை உண்டு.

ஓட்டுநர்: 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், உயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73388 93080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

Image result for மீன்வளப் பல்கலைக்கழக

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், 4 ஆண்டு கால புரபெஷனல் பட்டப் படிப்புகளாக இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்.சி.), இளநிலை மீன்வளப் பொறியியல் (பி.இ.) மற்றும் பி.டெக். (உயிர் தொழில்நுட்பவியல் ஆகிய பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதில், பி.எப்.எஸ்.சி. பட்டப் படிப்புக்கு 150 இடங்களும், பி.இ. பட்டப் படிப்புக்கு 30 இடங்களும், பி.டெக். பட்டப் படிப்புக்கு 40 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 7 இடங்களும், மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு ஒரு இடமும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மே 17 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் மே 17 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 16 -ஆம் தேதிக்குள் www.tnfu.ac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றும் செய்ய வேண்டும். 

மீனவர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்த விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ்களை இணைத்து 

Chairman, UG Admission Commission, 
Tamilnadu Dr. J.Jayalalitha Fisheris University, 
First Line Beach Road, 
Nagapattinam - 611 001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மற்ற பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றினால் மட்டும் போதுமானது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும்போது மாணவர்கள் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும்.

ஜூன் 30-இல் தரவரிசைப் பட்டியல்... 

கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் ஜூன் 30 -ஆம் தேதி வெளியிடப்படும். ஜூலை இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில் நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி மற்றும் இடம் ஆகியவை இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365- 240558 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

மீனவர்களின் குழந்தைகளுக்கு...

மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பிரிவின் கீழ் மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 7 இடங்களும், மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இந்த கட்டணங்களை தமிழ்நாடு மீனவர் நலவாரியம் ஏற்கிறது. எனவே, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் இந்த வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

மே 20-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கான இலவச கருத்தரங்கம்

Related image

ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிக்கான இலவச கருத்தரங்கம் சென்னை அண்ணாநகரில் உள்ள கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் மே 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- 

கிங் மேக்கர்ஸ் அகாதெமியில் 2018-2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வுக்கான புதிய பயிற்சி வகுப்புகள் மே 27, ஜூன் 17 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளன. இதையொட்டி, மே 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இலவச கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வருமான வரித் துறை இணை ஆணையர் நந்தகுமார், ஐஎஃப்எஸ் அதிகாரி பிரவீண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றவுள்ளனர். அப்போது தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த அனைத்து வழிமுறைகளையும் அளிக்கவுள்ளனர்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், அறிவாற்றலின் அடிப்படையில் முதல் மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் 94442 27273 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தங்களது பெயர், கல்வித் தகுதி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TET - மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி

Related image

ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு இலவச பயிற்சி பெற மே.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் பயிற்சி முடித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத பள்ளிக்கல்வித் துறை மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சிக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

இப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், தங்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தொடர்பு தொலைபேசி எண் ஆகியவற்றை குறி்ப்பிட்டு, விருப்பக் கடிதம் ஒன்றை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை -600006  என்ற முகவரிக்கு வரும் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். பயிற்சி நடக்கும்இடம் மற்றும் காலம் குறித்த தகவல்கள், சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்கப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத விரும்பும் பார்வையற்றோர் இந்த வாய்ப்பினைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.