Saturday, May 12, 2018

தமிழகத்தில் 28 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லை: அதிகாரி தகவல்

Image result for engineering college closed

தமிழகத்தில் 28 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதால் அந்த கல்லூரிகளில் வருகிற (2018-2019) கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பி.இ. மாணவர் சேர்க்கை இல்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப குழு மண்டல தலைவர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 562 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழக்தில் 28 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் மண்டல தலைவர் பாலமுருகன் கூறியுள்ளார்.

அதாவது, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 28 கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளை மூடக்கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவிற்கு விண்ணப்பித்துள்ளன. அந்த கல்லூரிகளை மூட அனுமதி இன்னும் வரவில்லை. ஆனால், அனுமதி வந்தாலும் வரவில்லை என்றாலும் கல்லூரிகள் மூடவேண்டும் என்று முடிவு செய்து விண்ணப்பித்து விட்டால் அந்தக்கல்லூரிகள் இந்த கல்வியாண்டுக்கான (2018-2019) மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. நடத்தவும் மாட்டார்கள்.

ஆனால், அந்த கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். அதனால் மாணவர்கள் அந்த கல்லூரிக்கு செல்வார்கள். ஆனால் புதியதாக முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் இருக்காது. இந்த கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வில் கல்லூரிகளின் பட்டியல் இடம் பெறாது என தெரிவித்தார்.

மேலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி பெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 23 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகக்குறைவாக இருந்ததன் காரணமாகவே, 28 கல்லூரிகள் மூடும் நிலையில் உள்ளன.

No comments:

Post a Comment