Thursday, June 7, 2018

இளைஞர்களுக்காக ஒரு நூலகம்!

Image result for நூலகம்!

பொது நூலகங்களாக இருந்தாலும், தனியார் நூலகங்களாக இருந்தாலும், நூல்களை இரவலாகப் பெறுவதில் சில நடைமுறைகள் உள்ளன. அரசு நூலகங்களில் பாட நூல்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், பொது அறிவுக் களஞ்சியம் போன்ற நூல்களை இரவலாகத் தருவதில்லை. அங்கேயே குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். ஸ்கேன் செய்து பென்டிரைவ், சிடி போன்றவற்றில் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது அங்கேயே கட்டணம் செலுத்தி நகல் எடுத்துக் கொள்ளலாம். 

அதேநேரத்தில், தனியார் நூலகங்களில் இதுபோன்ற நூல்களை இரவல் பெற்றுச் செல்லலாம். ஆனால், வாடகை அதிகமாக இருப்பதோடு, நாம் பெறும் நூலின் விற்பனை விலையை முன்பணமாகச் செலுத்த வேண்டும். இதனால், தனியார் நூலகங்களைப் பயன்படுத்துவது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. குறிப்பாக, கிராமப்புற மாணவர்களுக்கு இது எட்டாக் கனி.

இன்றைய இளைஞர்களின் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்காகவும், அவர்கள் நூல்களைத் தேடி நூலகங்களுக்கு அலையாமல், நூலகத்தையே அவர்கள் இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கும் வகையிலும் தொடங்கப்பட்டதுதான் தேசிய டிஜிட்டல் நூலகம் (National Digital Library) (NDL-India).குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பணியில் தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்புவோர், வாழ்நாள் கற்றல் வேட்கை உள்ளவர்கள் பயனடையும் வகையில், இந்த நூலகத்தை Indian Institute of Technology-Kharagpur கட்டமைத்து, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது.

இந்த நூலகத்தில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தொகுதிகளில், 72 லட்சம் வகையான தகவல் களஞ்சியங்கள் சுமார் 6.5 கோடி நூல்களாகவும், இதர வடிவிலும் ஆங்கிலத்தில் உள்ளன. இந்த நூலகத்தில் வெறும் புத்தகங்கள் மட்டுமல்லாமல், கட்டுரை தொகுப்புகள், ஆய்வறிக்கைகள், வீடியோ தொகுப்புகள், ஒலி தொகுப்புகள், கல்வி சார்ந்த தொகுப்புகள், 8 மாநிலங்களின் மாநில பாடத்திட்ட நூல்கள், NCERT பாட நூல்கள், GATE, UPSC கேள்வித் தாள்கள், World e-Book Library போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

இவையல்லாமல், இயற்கை மொழி செயல்முறை, Machine Learning, தொழில்நுட்பத் தேடல்கள், Metadata Engineering, Experience Tracking, தரவு பகுப்பாய்வு போன்றவற்றில் பயனாளர்களுக்கான வசதிகளைத் தருவதற்காக தேசிய டிஜிட்டல் நூலகக் குழு தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. By type தேர்வு மூலம் நமக்குத் தேவையான தகவல்களை வீடியோ, படம், அசைவூட்டப்படம், உருவகப்படம் போன்ற உரை அல்லாத வடிவங்களிலும் பெறலாம். 

தேசிய டிஜிட்டல் நூலகம் தற்போது ஆங்கிலம், ஹிந்தி, வங்க மொழிகளில் மட்டும் உள்ளடக்கங்கள் உள்ளன. இதை பிற வட்டார மொழிகளிலும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நூலகத்தை 1ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் பிரிவு வரை உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், நூலகர்கள், தொழிலில் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம்.

NDL-India-வில் உள்ள அனைத்து தகவல்களும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. அதேசமயம், World e Book Library, South Asia  Archive, OECD iLibrary, Satyajit Ray Society உள்ளிட்டவையும் NDL-India-வில் இணைந்துள்ளன. இவற்றின் பெரும்பாலான தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், பெரும் தொகுப்பைப் பார்வையிடுவது, பதிவிறக்கம் செய்வது, பிரிண்ட் எடுப்பது போன்றவை அவற்றின் கொள்கை மற்றும் விதிகளுக்கு உட்பட்டதாகும்.

தேசிய டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்த Personal Computer, Laptop, Mobile Phone இவற்றில் ஏதேனும் ஒன்று, இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதுமானது. இதற்கென தனி ஹார்டுவேர் எதுவும் கிடையாது. NDL-India தகவல்கள் CD-ROM வடிவில் வழங்கப்படுவதில்லை. இந்த நூலகத்தைப் பயன்படுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தனிநபர்கள், நிறுவனங்களைச் சார்ந்த உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும், அனைத்து வயதினரும் இதில் உறுப்பினராகப் பதிவு பெறலாம். இது முழுக்க முழுக்க அறிவுப் பரவலுக்கான முன்னெடுப்பு என்பதால், இதில் உறுப்பினராகவோ, நூலகத்தைப் பயன்படுத்தவோ எந்தவிதக் கட்டணமும் இல்லை. 

தனிநபர்கள் NDL-India (https://ndl.iitkgp.ac.in) தளத்தில் சென்று செல்லிடப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து தங்களின் சுய விவரங்களுடன் எந்த வகையான பயனாளர் என்பதைத் தெரிவித்து உறுப்பினராகச் சேரலாம். 

NDL-India செயலியை Google Store-இல் இருந்து இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை iTunes Store-இல் இருந்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சர்வதேச அளவில் எத்தனையோ டிஜிட்டல் நூலகங்கள் இருந்தாலும், ஒற்றை சாளர தேடுதல் முறையில், ஒரே இடத்தில் 24 மணி நேரமும் அனைத்து தகவல்களும், அனைத்து வடிவங்களிலும் கிடைக்கக்கூடிய கல்வி சார்ந்த ஒரே டிஜிட்டல் நூலகமாக இது உள்ளது.

No comments:

Post a Comment