Saturday, August 10, 2019

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை: சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை க்கான பட முடிவு

சிறுபான்மையினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவித்துள்ள முஸ்லிம், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநில, மத்திய அரசால் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உள்பட) பயில்வோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 

இதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 

நிகழாண்டில் (2019-2020) தமிழகத்தில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் சார்பில் 1லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இக்கல்வி உதவித்தொகை மாணவ, மாணவிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக விடுவிக்கப்படும். பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ, மாணவிகள் 15.10.2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31.10.2019 வரையிலும் மேற்குறிப்பிட்ட இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

மாணவ, மாணவிகள் அனைவரும் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட நாள்களுக்குள் அந்தந்த கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்கலாம். 

ஆவண நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்து தங்களது கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ, மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 

இணைய தளத்தில் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை மிகவும் கவனத்துடன் பதிவு செய்வது அவசியம். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ, திருத்தவோ இயலாது.

மாணவ, மாணவிகளின் ஆதார் எண்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்படமாட்டாது. கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை, சான்று, ஆவணங்களுடன் பரிசீலித்து, தகுதி பெற்ற விண்ணப்பங்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்பட வேண்டும்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் மற்றும் இதர நிபந்தனைகள் அடங்கிய விரிவான விவரங்கள்  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment