Wednesday, July 25, 2018

ஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள்: புதிதாக போட்டித் தேர்வு அறிமுகம்|

Image result for ஆசிரியர் பணிக்கு இனி 2 தேர்வுகள்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுடன் புதிய நியமனத்துக்கான போட்டித்தேர்வு என இனி இரண்டு தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறை இனி கிடையாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே போட்டித் தேர்வை எழுத முடியும். இந்த இரு தேர்வுகளையும் தனித் தனியாக நடத்தலாம் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியராக நியமனம் பெறுவதற்கான தகுதித் தேர்வாக மட்டுமே உள்ள நிலையில் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றாலே போதும். இந்த நிலையில் அரசுப் பள்ளியில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், பணி வேண்டுவோர் வழங்கும் கல்விச் சான்றிதழின்படி பெற்ற மதிப்பெண்ணுக்கு ஈடாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் அதிக தரம் பெற்றவர்கள் இன சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்ய உத்தேசிக்கப்பட்டது. 

இவ்வாறு ஆசிரியர் தகுதித் தேர்வுடன் வெயிட்டேஜ் மதிப்பீட்டு முறை பின்பற்றுவதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னர் தேர்ச்சி பெற்ற பணி வேண்டுவோரின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண் தற்போது தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதிக்கான மதிப்பெண்ணுடன் ஒப்பிடுகையில் அவர்களது வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் வேறுபாடுகள் காணப்பட்டு சமன்பாடு இல்லாத நிலை ஏற்படலாம். மேலும் ஆந்திர போன்ற பிற மாநிலங்களில் இந்த வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படவில்லை. அங்கு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் நியமனத்துக்கான போட்டித் தேர்வு தனித் தனியாக நடத்தப்படுகிறது. 

வெயிட்டேஜ் முறையில் இடர்ப்பாடுகள்...: 

ஆசிரியர் தகுதித் தேர்வுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவதில் ஒவ்வொரு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் பணி, இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மற்றும் தரவுகளைப் பராமரிப்பதிலும் இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் கணக்கீட்டின்படி ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே ஆசிரியர் பணி நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பணி வேண்டுவோர் மத்தியில் ஏற்படுகிறது. 
இவ்வாறு தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் தெரிவித்த பரிந்துரைகள் சார்ந்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் துறைத் தலைவர்கள், உயர் அலுவலர்களுடன் கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கீழ் கண்டவாறு முடிவெடுக்கப்பட்டது. 

தனித் தனியாக இரு தேர்வுகள்: 

தமிழ்நாடு மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரையினை ஏற்று ஆசிரியர் தகுதித் தேர்வை தனியாகவும், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தெரிவுக்கான போட்டித் தேர்வையும் தனியாகவும் நடத்தலாம். அவ்வாறு போட்டித் தேர்வு எழுதுதவற்கு விண்ணப்பிப்போர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியம்.

தமிழ்நாடு பொதுப் பள்ளிக் கல்வி வாரியம் அளித்த பரிந்துரை, அதன் மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை அரசு கவனமாக ஆய்வு செய்து, ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தனித்தேர்வாகவும், அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கு உரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, போட்டித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்துவது என்றும் அதன் அடிப்படையில், பணிநியமனம் குறித்த உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தெரிவு செய்வது என அரசு முடிவு செய்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

To Join Free Whatsapp Job Alert
-

No comments:

Post a Comment